Tuesday, October 11, 2016

மது வீட்டுக்கொலு வழி திருவாரூர்


ஒவ்வொருத்தருக்கும் கொலுவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பலருக்கும் சுண்டல். எனக்கு கதைகளும் பாடல்களும். மதுசூதனன் கலைச்செல்வன் என்னை அன்புடன் அவர் வீட்டுக்கொலுவுக்கு அழைத்தபோது நான் மிகவும் ஆவல் கொண்டேன். மது பாரம்பரியமான விஷயங்களில் கொள்ளும் சிறந்த ஈடுபாடு என்னை அவர் வீட்டுக்கொலுவை ஆவலுடன் எதிர்கொள்ள வைத்தது.

மது எனக்கு முதலில் அறிமுகமானது, அவர் ஸ்ரீரங்கத்து அரையர் சேவை பற்றி ஆற்றிய சிறிய, ஆனால் பேரார்வமும் பேருணர்வும் ததும்பும்  உரை. இவரது சிறந்த ஆளுமை அந்த சிறிய உரையிலேயே மிகவும் பிரகாசித்தது.

அதற்குப்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்   ஆர் கே அரங்கில் அவர், பத்மா சுகவனம் பாடல்களுடன்  ஆற்றிய ' கலியன் கண்ட கண்ணபுரம்' உரை நான் என்றென்றும் கேட்டு களிக்கும் ஒரு உரையாக அமைந்தது. எனவே அவரது வீட்டில் அவர்கள் அமைத்துள்ள கொலுவை கண்டு களிக்க பேராவல் கொண்டேன்.

மது இவ்வருடம், அவர் வீட்டுக் கொலுவில் திருவாரூர் பற்றிய அம்சங்களை சிறப்புப் பொருளாக அமைத்திருந்தார். கொலுவில் பொம்மைகள் வைப்பதோடு நில்லாமல் அவை கூறும் கதைகள் கூறக் கேட்பது அலாதி இன்பம் . அவ்வழி நான் மதுவினிடத்து கொலுவின் வழி திருவாரூர் பற்றி அறிந்து கொண்ட விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.

திருவாரூர் ஒரு திருவிடங்க ஸ்தலம். முதலில் விடங்கம் என்பதின் பொருள் என்ன என்ற ஐயம் மதுவிடம் தெரிவித்தேன் , அதில் தொடங்கியது ஒரு நெடும் அழகிய பயணம் திருவாரூரை சூழ்ந்த சிறப்புகளின் வழி.


முதலில் 'டங்' என்பது உளியினால் ஏற்படும் சத்தத்தை குறிக்கும். திருவாரூர் தியாகேசர் உருவம் உளியால் செதுக்கப்பட்டதன்று என்பதை குறிக்கும் வகையில் அவரை விடங்கர் என்று அழைக்கின்றனர். ஆம் இவர் மனதால் நிர்மாணிக்கப்பட்டவர். விஷ்ணு இவரை தன் மார்போடு அணைத்தபடி பூஜித்து வந்துள்ளார். இதனாலே இவர் பல்லக்கு உற்சவத்தின்  போது மேலும் கீழுமாக அசைத்தபடி ஆராதிக்கப் படுகிறார். இதை அஜபா நடனம் என்று அழைக்கின்றனர். இந்த முறை தியாகேசர் வழிபடப் படும் அணைத்து ஸ்தலங்களிலும் பின்பற்றப்படுகிறது .
விஷ்ணுவிடம் இருந்து இந்திரன் வாங்கி பூஜித்து வருகிறான். இந்திரனுக்கு ஒரு சோதனையின் போது  முசுகுந்த சோழன் ( இவன் முகம் குரங்கு வடிவானது ) உதவுகிறான். சோழன் தியாகேசரை கேட்கிறான் இந்திரனிடத்து. தியாகேசரை பிரிய மனமில்லாத இந்திரன் , அந்த சிலை போலவே 6 சிலைகளை உருவாக்கச் செய்கிறான். முசுகுந்தரின் பக்தியை சோதிக்கும் வழியில் விடங்கரை கண்டு எடுத்துக்கொள்ளும் படி கூறுகிறான்.
சோழன் விடங்கரை சரியாக கண்டு கொண்டதை மெச்சி அணைத்து சிலைகளையும் அவனுக்கே பரிசளிக்கிறான். இவ்வாறாக விடங்கர் திருவாரூருக்கும் பிற சிலைகள் அதை சுற்றி ஆறு கோயில்களிலும் நிர்மாணிக்கப் படுகின்றன. இவை முறையே சப்த விடங்க ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன, அவை - திருவாரூர் , நாகை காரோணம் , திருக்கோளிலி , திருநள்ளாறு , திருக்காரையில் , திருவாய்மூர் மற்றும் திருமறைக்காடு.

தியாகராஜர் இந்த ஸ்தலங்களில் சோமாஸ்கந்தர் ஆக காட்சி அளிக்கிறார் . நமக்கு சாதாரணமாக முகங்கள் மட்டுமே தெரியும். உருவம் முற்றிலும் தெரியாதவாறு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் .

தியாகராஜரை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம், இனி இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கும் அடியார்களைப் பற்றி காண்போம் . முசுகுந்தன் வழியில் வந்த மனுநீதி சோழனிடத்து பசு நீதிகேட்டது இவ்விடமே .அக்குலத்தில் பின் தோன்றிய, ராஜேந்திரசோழன் தனக்கு அணுக்கமான பரவை நாச்சியாருடன் இங்கு நின்று வழிப்பட்ட இடத்தில் இரு விளக்குகள் ஏற்றி வைக்க கட்டளைப்  பிறப்பித்துள்ளான் .


சமணர்கள் இந்த கோயிலைச்  சுற்றி வாழ்ந்து வந்துள்ளனர். அப்படி சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய நமி நந்திஅடிகள் தண்ணீர் கொண்டு விளக்கேற்றிய சிறப்புடையது இத்தலம்.

சமணர்கள் இக்கோயிலின் குளத்தை மணல் கொண்டு மூட முற்பட, அதை எதிர்த்து, பார்வையற்ற தண்டியடிகள் அந்த குளத்தை மணல் தூற்றி காத்த தலம் இதுவே.

இந்த கமலாலயத்தின்  கரையில் தான் சுந்தரர் மணிமுத்தாறில் பொன்னை விட்டு இங்கு வந்து எடுக்கிறார், அந்த பொன்னை  சோதித்து தரும் படி கணபதியிடம் வேண்டுகிறார்.  சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடி அருளியதும் , சுந்தரருக்காக பெருமான் பரவை நாச்சியாரிடம் தூது சென்றதும் இத்தலமே .
திருவாரூர் பிறந்தோரெல்லாம் அடியேன் என்று சிறப்பு பெற்றது இத்தலம் .

இக்கோயிலின் ஆழிதேரழகை அப்பரும் சம்பந்தரும் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பாக பாடியுள்ளது இக்கோயிலின் நீண்ட சிறப்புக்கு சாட்சியாகும்.

திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக பெருமான் தனியே ஒரு வாசல் அமைத்து வருவித்தது மேலும் சிறப்பு .

பலவித கணபதி இங்கே வழிபடப் படுகின்றது . வாதாபி கணபதி இங்கு தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வல்லப கணபதி, உச்சிஷ்ட கணபதி பஞ்சமுக கணபதி என்ற வழிபாடுகளும் இங்கே உண்டு.

சிதம்பரம் கோயிலுக்கும் இக்கோயிலுக்கு பல சிறப்புகள் ஒருபோல அமைந்துள்ளதை காணலாம். தில்லை நடராஜர் இங்கு சில வருடங்கள் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவலும் உண்டு.

இந்தக்கோயிலுக்கென சிறப்பான இசை வாத்தியங்கள் சில உள்ளன அவை பஞ்சமுக வாத்தியம் மற்றும் தலையில் தாங்கிய படி அடிக்கும் மேளம்.

இத்துணை சிறப்புகள் போதாதென்று கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகள் பிறந்தது திருவாரூரிலே தான்.
என்று திருவாரூர் பற்றி ஒரு பரந்து விரிந்த  அழகிய கதா -சித்திரத்தை கண் முன் தீட்டி நிறுவினார் மது. எமக்கும் இந்த நவராத்திரியில் இப்படி ஒரு அழகிய அனுபவம் வாய்த்தது மிக்க மகிழ்ச்சி. இனி நாம் அடுத்த வருடம் மது  வீட்டுக்  கொலுவின் வழி மற்றுமொரு தலத்தைப்  பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்போம். 

No comments: