Monday, September 26, 2016

காதல் வள்ளி கண்ட முருகன் - நாட்டிய நாடகம்

காதல் வள்ளி கண்ட முருகன் - நாட்டிய நாடகம்

பெரியசாமி தூரன் அவர்கள் எழுதிய முருகன் - வள்ளி காதல் நாடகத்தை தனஞ்செயன் குழுவினர் கலாக்ஷேத்ராவில் மிகச்சிறப்பாக அரங்கேற்றினர். 1972 இல் பண்ணாராய்ச்சி கழகத்திற்காக முதலில் அரங்கேறிய இந்த நாட்டிய நாடகம் 44 வருடங்கள் கழித்து இன்று அரங்கேறியது மெய் சிலிர்ப்பான ஒரு நிகழ்வாக அமைந்தது.


தமிழ் தனது இயல் இசை நாடகம் என்ற மூன்று சீரிளம்  சிறப்புகளுடன் பல் மடங்கு அழகு கூடி ஜொலித்தது, சொல்லொனா மன நிறைவு தந்தது. இசை என்றாலே தெலுகு கீர்த்தனைகள் என்றும், நாடகம் என்றால் ஆங்கில நாடகம் என்று கண்டு ஏங்கிக்கிடந்த இந்த தமிழ் நெஞ்சம் இன்று இந்த நாட்டிய நாடகத்தை கண்டு பெரும் மகிழ்ச்சி கொண்டது.

நாடகத்தில் முருகனின் அழகும் வசீகரமும், அழகிய தமிழாலும் இசையாலும் மேலும் வயப்படும் தமிழ் நெஞ்சம், இது போன்ற கதைகளும் நாடகங்களும் கண்டு உணர்வெழுச்சி பெற்றே தனது தெய்வங்களை உருவாக்கிக் கொண்டதோ  என்ற ஐயத்தை நெஞ்சில் எழச்செய்கிறது. இன்றைய காலத்தில் பலரும் திரை நடிகர்களை தெய்வமாக போற்றும் உணர்வு பெருக்குகலும் இது போன்றதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

முருகன் -வள்ளியின் அழகு ரசம் சொட்டும் காதல் காட்சிகள் மனதிற்கு கோதை-ரங்கன் காதலையும், மீரா-கிருஷ்ணன் காதலையும் நினைவூட்டியது. இந்த காதல்கள் தாம் நம் தெய்வங்களை செய்தனவா என்று எண்ணத்தோன்றுகிறது.

பெரியசாமி தூரனின் வரிகளில் தமிழ் அழகியாக, எளியவளாக, இசை எனும் கோட்பாட்டுக்குள், காவடிச்சிந்துவாக , கும்மி பாடல் என்று வேறு வேறு ராக உடைகளில் தமிழ் பெண்  கச்சிதமாக பொருந்தியவளாக நம்மை ஆட்கொள்கிறாள் .

நடன அமைப்புகள் தமிழ் வரிகளை எந்த பிசிரும் இல்லாமல் சிறப்பாக தொடர்ந்து அழகுக்கு மேலும் அழகூட்டின.சாந்தா  தஞ்சயனின் குரல், இளமை குன்றாமல் சிறப்பாக பொலிவு சேர்த்தது.

இந்த நாட்டிய நாடகம் தமிழ் மொழியின் பெருமை. இது அணைத்து தமிழ் நெஞ்சங்களையும் போய்  சேர வேண்டும்.. நிகழ்வின் முடிவில் நாற்பது வருடங்கள் முன் அரங்கேறிய முதல் முறையில் பங்கேற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்  பட்டது பூரிப்பை தந்தது. தனஞ்செயன் குழுவினருக்கு பாராட்டுகள்...

No comments: