Wednesday, August 12, 2015

சக்திக் கூத்து by பிரசன்னா ராமசாமி

சக்திக் கூத்து by பிரசன்னா ராமசாமி

தமிழில் நவீன நாடகம் என்றொரு அப்பிராணி, ஒரு அறிவுஜீவிக்  குழுவிடம் சிக்குண்டு படும் பாட்டை அறிந்துகொள்ள இந்த ஒரு நாடகத்தை பார்த்தால் போதுமானது.

தன் அறிவுக்குத் தெரிந்த அத்துனை விஷயங்களையும் சமைத்து நமக்கு மேடையில் படைத்து நம்மை திக்கு முக்கடையச் செய்ய வேண்டும் என்பது தான் படைப்பாளியின் நோக்கமோ என்று நமக்கு தோன்றும் அளவுக்கு அறிவுஜீவித்தனம் ஆங்காங்கே மின்னி நம் கண்களை கூசி வெறுக்கச் செய்கிறது.

நாடகத்தின் உயிர்துடிப்பாக திகழ்வது ரோஹினியின் நடிப்பு, குறிப்பாக அவரது முக பாவனைகள். கோவம், சீற்றம், காதல் என அடுத்தடுத்த காட்சிகளில் எந்தவொரு நெருடலும் இல்லாமல் பாவனை மாறும் போது நமக்கு சிரம் தாழ்த்தி, வணங்கி, பாராட்டி மெய் மறப்பதன்றி செய்வது ஒன்றும் இல்லை.

பறை இசையை தனது எழுத்து கைக்கொடுக்காத இடங்களில் பார்வையாளனின் கவனத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு சூட்சமமாகவே மட்டுமே இயக்குனர் ஆண்டுள்ளார் என்பது நமக்கு சலிப்பையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

பாரதியின் படல்களை இசைப்படுத்தி கேட்கலாம் என்ற எமது ஆர்வத்தை ஈடுசெய்வதை தவிர,  கர்நாடகம் காட்சியின் தொனியோடு சேராமால் தனித்து ஒரு தளத்தில் செயல் பட்டு முகம் சுழிக்கச்செய்கிறது.

பி ரா  வின் எழுத்து கட்டுரை வடிவத்திற்கு ஏற்றது. அவரது எழுத்து, படித்து சுவைக்க உகந்ததாக தோன்றுகிறது. அது நாடகத்திற்கு பொருந்தவில்லை, சலிப்பு தட்டுகிறது. 'மகரந்தம் பரப்பும் காற்று, chemical ஐ பரப்புகிறது' என்பது போன்ற பொருள் பதிந்த வாக்கியத்தின் ஆதங்கம் வாசிக்க சுவைதரும் நெகிழக்கூடச் செய்யும் , ஆனால் அதை மேடையில் சொல்லக் கேட்க்கும் போது அது நம்மை எத்தனை கூசி நெளியச்செய்கிறது என்று யாரேனும் பிரசன்னா ராமசாமிக்கு புரியச் செய்யுங்களேன் என்று நம் மனம் விம்முகிறது. எத்தனை அருமையான நடிப்பை , இசை மற்றும் நடன பங்களிப்புகளைக்  கலங்கச் செய்து விடுகிறது இது போன்ற அதிவியாக்யான எழுத்து.

ஒரு காவிய கதைப் பொழிவின்  ஊடே தற்கால கருத்துக்களைப் புகுத்த வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணம் பாரட்டுக்குரியது. ஆனால் அதை பிரதான கதை மாந்தர் கொண்டே செய்வது பார்வையாளனை அந்நியப்படுத்தி விடுகிறது. ஒரு விதூஷகன் அல்லது கோமாளியைக்  கொண்டு அதைச்  செய்திருக்கலாம். திரௌபதியே, 'இது romance , அதற்கொரு பாட்டு' என்று prompt செய்வது, ரோகினி செய்யும் போது அழகாக தோன்றினாலும் பல இடங்களில் நமக்கு வேதனையை தருகிறது.

நாட்டிய அசைவுகள் ஒரேபோல அமைந்திருந்தன. நாட் டிய அமைப்பை இயக்குனர் தனியொரு ஆளுமையைக் கொண்டு அமைத்திருக்கலாம். சில அசைவுகள் ச்பசெஸ் போன்ற திறந்த மற்றும் சுற்ற ரங்கிற்கு வடிவமைக்கப்படிருந்தன , அவற்றை உள்ளரங்கில் காணும் போது அவை பொருளற்றிருந்தன, பார்வையாளனை இன்னும் அந்நியப்படுத்துவன.

'அண்ணே ...' என்ற பீமனின் கூற்று நாடகத்தில் ஒரு நல்ல உச்சத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால் இயக்குனருக்கு பார்வையாளனின் நாடி அல்ல முக்கியம், அவரது  கவனம் வேறு திசைகளில் உள்ளதால் ஒரு அழகான நாடகீய கூற்று கை நழுவி போகின்றது.


கிரேக்க காவியங்களின் ஒரு இழையை இந்த கூத்திற்க்குள் காரணமில்லாமல் நுழைப்பது, globalisation இன் விளைவோ. அந்நிய தொன்மங்களையும் கூட நம் மீது திணிக்கத்தான் வேண்டுமா என்று நம்மை பரண் பார்த்து வினவச் செய்கிறது.. தமிழில் நவீன நாடகம் இப்பொழுது தான் தளிர் நிலையில் உள்ளது, அதை காத்து செழிப்பூட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு மற்றும் வாய்ப்புகள் பிரசன்னா ராமசாமி போன்றவர்களுக்கு உண்டு. ஆரம்ப நிலையிலேயே அதற்க்கு big global ideas போன்ற ரசாயனங்களை தெளித்து விட வேண்டாம் என்பது எம் கருத்து.

No comments: